17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைப்பெற்றது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்நிலையில் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறைச்சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதில் மக்களவையில் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில் "தமிழகத்தில் சித்தா மருத்துவக்கல்லூரிகளின்" எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு கர்நாடக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் மாநிலங்களவையில் பேசினார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் முதல் நாளிலேயே தமிழக எம்பிக்கள் இரு அவைகளிலும் மக்கள் பிரச்சனை குறித்து ஆக்கப்பூர்வ விவாதத்தை முன்னெடுத்து சென்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக எம்பிக்களின் குரல் இரு அவைகளிலும் எதிரொலித்தது என்றே கூறலாம்.