கேரள மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிபா வைரஸால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்புகள் உடனடியாக கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்துவந்த செவிலியர் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் பெருவண்ணமுழி பகுதிக்கு அருகாமையில் உள்ளது செம்பநோடா. இந்தப் பகுதியைச் சேர்ந்த லினி (வயது 31) என்னும் செவிலியர் பெரும்ப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சித்தார்த், ரித்துல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சஜீஷ் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு லினி பணிபுரியும் மருத்துவமனையில், நிபா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து லினிக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். லினி தான் உயிரிழப்பதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தில், என்னால் உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா என்பது தெரியவில்லை. தயவுசெய்து நம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களையும் உங்களோடு துபாய்க்கு கூட்டிச் சென்று கவனித்துக் கொள்ளுங்கள். என் அப்பாவைப் போல நீங்களும் நம் பிள்ளைகளை தனியாக தவிக்க விட்டுவிடாதீர்கள் என உருக்கமாக எழுதியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த லினியின் உடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. பணியின் போது உயிர்நீத்த லினிக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.