நாளை இந்தியாவின் 74 -ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர் பலரும் மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "மூவர்ண கொடியைப் பறக்க விடும் ஆகஸ்டு 15 -ஆம் நாள் நம்முள் பரவசம் நிரம்புகிறது. நாம் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறோம். தேசப்பற்று பாடல்களைக் கேட்கிறோம். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் குடிமகன்கள் என்ற சிறப்பு பெருமையை நாட்டிலுள்ள இளைஞர்கள் உணர வேண்டும். நம்முடைய விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மகாத்மா காந்தி இருந்ததற்கு நாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் ஆவோம்.
உலகம் உயிர்க்கொல்லி வைரசை எதிர்கொண்டுள்ளது. அது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி பெருமளவில் உயிர்களைப் பலி கொண்டுள்ளது. தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த உலகை அது மாற்றியுள்ளது. வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு தேசம் கடன்பட்டு உள்ளது. நமது எல்லைகளைக் காப்பதில் வீரம் நிறைந்த நம்முடைய சிப்பாய்கள் உயிரிழந்து உள்ளனர். பாரத மாதாவின் உயரிய மகன்களான அவர்கள் தேசத்தின் பெருமைக்காகவே வாழ்ந்து, மறைந்து உள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முழுநாடும் தலை வணங்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.