இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஜெனரல் டயர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள், ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த இந்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 1000திற்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்த இந்த சம்பவம் இந்தியர்களின் விடுதலை உணர்வை வீறு கொண்டு எழச் செய்தது.
இந்திய சுதந்திரமடைந்த பிறகு, இந்த படுகொலையை நினைவு கூறும் வகையில், ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு 20 கோடி ரூபாய் செலவில், இந்த ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தைப் புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமையன்று திறந்து வைத்தார்.
இந்தநிலையில் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு சமூகவலைதங்களிலும், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாலியன் வாலாபாக்கிற்குள் ஜெனரல் டயர் தனது படைகளோடு புகுந்த நுழைவுவாயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஜாலியன் வாலாபாக்கிலிருந்து வெளியேறும் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டிலிருந்து மக்கள் தப்ப முடியாதபடி அடைக்கப்பட்ட குறுகிய பாதையில் பளபளப்பான புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க மக்கள் குதித்த 'ஷஹீதி கு' (தியாகிகள் கிணறு) கண்ணாடியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களினால் ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் தனது பழமையை இழந்துவிட்டதாகவும், அங்கு நடந்த படுகொலையின் கோரத்தை வெளிப்படுத்தும் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ராகுல் காந்தியும் மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தியாகியின் மகன். தியாகிகள் அவமானப்படுவதை நான் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அநாகரீகமான கொடுமையை நாங்கள் எதிர்க்கிறோம்" எனக் கூறியுள்ளார். மேலும் தனது இன்னொரு ட்வீட்டில், "சுதந்திரத்திற்காகப் போராடாதவர்களால், அதற்காகப் போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.