Skip to main content

திருப்பதி கோவிலில் மின்கசிவால் ஸ்கேன் கருவிகள் பழுது: 6 பக்தர்கள் காயம்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
திருப்பதி கோவிலில் மின்கசிவால் ஸ்கேன் கருவிகள் பழுது: 
6 பக்தர்கள் காயம்

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள், திவ்ய தரிசன பக்தர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள் ஆகியோர் தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.

பிரதான நுழைவு வாயில் அருகில் உள்ள ஸ்கேன் மையத்தில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்புப்படை போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்புப்படை ஊழியர்களும் சோதனைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்கேன் கருவிகளுக்கு கீழே இருந்து திடீரென வயர் கருகி துர்நாற்றத்துடன் கூடிய புகை வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓட முயன்றனர்.

உடனே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை அமைதிப்படுத்தி சிறிது நேரம் தரிசன வரிசையிலேயே தங்க வைத்தனர். இந்த மின்கசிவால் 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் பெயர் விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஸ்கேன் கருவிகள் பழுதடைந்து விட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து தரிசன வரிசையில் தங்க வைக்கப்பட்ட அனைத்து பக்தர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்யாமலேயே சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து பழுதான ஸ்கேன் கருவி மையத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு விரைந்து வந்து, அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சார்ந்த செய்திகள்