ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது வெளியுறவுத்துறையில் பணியாற்றி வருபவருமான டி.எஸ். திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016- ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவுக்கான நிரந்தர தூதராகச் செயல்பட்ட அக்பரூதீன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தற்போது சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான திருமூர்த்தி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 1962- ஆம் ஆண்டு மார்ச் 7- ஆம் தேதி சென்னையில் பிறந்த திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று, பின்னர் சட்டம் பயின்றார். அதன்பின் ஐஏஎஸ் தேர்வில் 1985- ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணை செயலாளராகப் பணியாற்றிய திருமூர்த்தி, கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இந்தியத் தூதரகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். மேலும், பாலஸ்தீனம், மலேசியா, ஜகார்தாவில் இந்தியத் தூதராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அக்பரூதீன் ஓய்வுபெற்றதை அடுத்து தற்போது ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராகத் திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.