பருவநிலை மாறுதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயருதல் ஆகிய காரணங்களினால், வங்கப்புலிகளின் இனம் அழியுமென சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட சுந்தரவன வனப்பகுதிதான் புவியில் பெரிய சதுப்பு நிலமெனவும், அதுதான் புலிகள் வாழ்வதற்கு தோதான இடம் என்றும் அந்த ஆய்வு சொல்லுகிறது. அதேசமயம், 2070-ம் ஆண்டிற்குள் சுந்தரவன வனத்தின் புலிகள் வாழ்விடம் முற்றிலுமாக அழிந்துவிடும்போல் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இன்னும் அரை நூற்றாண்டு மட்டுமே நமது தேசிய விலங்கான வங்கப்புலி நம் தேசத்தில் இருக்கும்.
இந்த ஆய்வு பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய இரண்டு காரணிகளை முக்கிய புள்ளிகளாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் மற்றொரு பெரும் அதிர்ச்சியான விஷயமும் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தை காட்டிலும் சுந்தரவனக் காடு தொழில்வளர்ச்சியால் பெரிதும் அழிக்கப்படுமென தெரியவந்துள்ளது.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்போது சாலை போக்குவரத்து அதிகரிக்கும் அதனாலே பெரும் வெப்பமயமாதல் ஏற்பட்டு புலிகள் வாழ்வதற்கு தகுதியான இடமாக அல்லாமல் சுந்தரவனக் வனப்பகுதி மாறும். இந்த ஆய்வு ஒரு சின்ன முன்னெச்சரிக்கைதான் இதை கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் நாம் வங்கப்புலிகளை முழுவதாக இழக்க நேரிடும் எனவும், மேலும் சுந்தரவனக் காடு அழிந்துவிட்டால் இந்த உலகில் புலிகள் வாழ வேறொரு இடம் நிச்சயம் இல்லை என இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மொத்தம் 4,000 புலிகள் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் அதில் அதிகாமன அளவு இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறுகிய நிலப்பகுதியில் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 2,226 புலிகளும், வங்கதேசத்தில் 106 புலிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.