இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பிவருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக விவாதிக்க ராகுல் காந்தி இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்த பதிவுகள் தங்களிடம் இல்லை எனவும், எனவே இழப்பீடு தருவது தொடர்பான கேள்வியே எழவில்லை எனவும் மத்திய அரசு கூறியதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் தரவுகள் தங்களிடம் இருப்பதாகவும் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.