சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.
இதையடுத்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில், அங்குள்ள ராஜ்பவனுக்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிசுப்பொருட்களை யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தித்தேன். அப்போதிலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். அதிலிருந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வருகிறோம். 5 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை, இப்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்” என தெரிவித்தார்.