புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (07/11/2020) நடைபெற்றது. கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்தில் காவல்துறை இயக்குனர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோத்ரா மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது, சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் தவறுகளை தடுப்பது, பணம் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் ரவுடிகள் சிறையில் இருந்தபடியே தங்கள் ஆதரவாளர்களிடம் செல்போனில் பேசி குற்ற சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர். அதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம். ரவுடிகள் சிலர் கடைகளிலும், தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறித்து வருவதாக புகார்கள் வருகின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடாது". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.