கொல்கத்தாவில் பெஹாலாவில் இறந்த சடலடத்துடன் வாழ்ந்ததாக சுபப்ரதா என்பவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெஹாலாவில் சுபப்ரதா என்பவரின் தாயார் பீனா மஜூம்தார் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது உடலை அவர் அடக்கம் செய்தாரா? இல்லையா என யாருக்கும் தெரியவில்லை. இதைப்பற்றி அருகில் உள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து கடந்த புதன் கிழமை சுபப்ரதா இறந்த சடலத்துடன் வாழ்கிறார் என்று தகவல் வெளிவர போலீசார் அன்று இரவே சுபப்ரதா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் வீட்டின் ஒரு அறையில் குளிருட்டப்பட்ட ஒரு பெட்டியில் வேதிபொருள்களின் உதவியுடன் பதப்படுத்தப்பட்ட ஒரு வயதான பெண்ணின் உடலைக் கண்டறிந்தனர், மேலும் அந்த சடலத்தின் கல்லீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகள் எடுக்கப்பட்டு ஒரு ஜாடியில் வேதியல் முறையில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததையும் கண்டறிந்தனர். மேலும் விசாரணையில் அது சுபப்ரதாவின் தாய் பீனாவின் உடல்தான் எனவும் சோதனையில் உறுதியானது. எகிப்தில் ''மம்மி'' எனப்படும் இறந்தவர் உடலை பாதுக்காக்கும் முறையில் இவர் உடலை பதபடுத்தியுள்ளார். இதுபோன்ற முறையை அவர் எவ்வாறு கையாண்டார் என்ற விசாரணையில் அவர் தோல் பதனிடும் முறையில் கைதேந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் மறுஜென்மம்,உடல் பதப்படுத்துதல் சம்பந்தமான புத்தகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அவரைத் தொடர்ந்து விசாரித்ததில் உடல் பதப்படுத்தப்பட்டால் என்றாவது ஒரு நாள் என் தாய் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார் சுபப்ரதா, அவர் மட்டுமின்றி அவரது 90 வயது தந்தையும் அதே வீட்டில் இருந்துவந்தாகவும் அவரும் தன் மனைவி உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில்தான் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் தாயாரின் பென்ஷன் தொகையை அவர் இறந்து மூன்று வருடங்களாக பெற்றிருக்கிறார், எனவே சான்றிதழ்களில் பாதுகாக்கப்பட்ட சடலத்தின் கைரேகைகளை பதிவுசெய்து தாயின் பென்ஷன் தொகையை தொடர்ந்து பெறுவதற்காக சடலத்தை பாதுகாத்துவந்தாரா என பலகோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் பார்தே என்ற மென்பொறியாளர் இறந்த தன் சகோதரியை ஆறு மாதங்களாக அடக்கம் செய்யாமல் ஒரே வீட்டில் சடலத்துடன் வாழ்ந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு இறுதியில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது ''ராபின்சன் ஸ்ட்ரீட்'' என்ற தலைப்பில் பேசப்பட்ட அந்த வழக்கு பல சர்ச்சைகளை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.