கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை 100 சதவீதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்தது. மேலும், தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை அமர்த்தும் போது நிர்வாகப் பணிகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மசோதாவில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 வருடங்களுக்கு மேலாக அம்மாநிலத்தில் வசித்து கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு இந்த மசோதாவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்தச் சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகா அரசு கொண்டு வந்திருந்த மசோதாவுக்கு ஐ.டி நிறுவனங்களின் சங்கமான மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (நாஸ்காம்) கண்டனம் தெரிவித்து மசோதாவை திரும்ப பெறுமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இது குறித்து நாஸ்காம் தெரிவித்திருந்தாவது, ‘கன்னட மக்களையே 50 சதவீத பணிகளில் நியமிக்க உத்தரவிட்டால் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு இடம் மறுக்கப்படும். மேலும், திறமையாளர்களை பணியில் அமர்த்த முடியாவிட்டால் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்’ எனத் தெரிவித்திருந்தது.
கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கர்நாடகா அரசு இந்த மசோதாவை அமல்படுத்துவதற்கு தற்போது பின்வாங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு 50 சதவீத பணிகள் ஒதுக்க வேண்டும் என்ற மசோதா, விரிவான ஆலோசனைக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அமைச்சர் பிரியங்க் கூறியுள்ளார்.