சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் பதவி வகித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் நிர்வாகிகளை மாற்றி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கடந்த 28 ஆம் தேதி மோகன் மார்கமை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமித்தார். இந்நிலையில் புதிய தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பூபேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களிடையே பேசினார்.
கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோகன் மிக கடுமையாக உழைக்கும் மற்றும் எளிமையான மனிதர் என கூறினார். பின்பு பேசிய பூபேஷ், கடந்த 2013- ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னை தலைவர் ஆக்கினார். 2014- ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பின் மாநிலத்தில் கட்சியின் நலன்கள் பற்றி கவலை ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கு பின் சத்தீஷ்கரில் நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை இந்த போராட்டம் தொடர்ந்தது என கூறினார். கடந்த 5 வருடங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றிகள் என கூறினார். இதன் பின், தன்னுடன் பணியாற்றியவர்களை பற்றி நினைவு கூர்ந்து சற்றுநேரம் கண் கலங்கியபடி பேசியது, கூடியிருந்த தொண்டர்களை கண் கலங்க வைத்தது.