எட்டாம் வகுப்பு தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட வனத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்குவங்க அரசு அண்மையில், வனத்துறை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 2,000 பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பணியிடங்களுக்கு பொறியியல், முதுகலைப் பட்டம், ஆராய்ச்சிப் படிப்பு என உயர்கல்வி படித்த ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கும் இச்சம்பவம் நாடு முழுவதும் நிலவிவரும் வேலை இல்லா திண்டாட்டத்தை வெளிக்காட்டும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. கரோனா பெருந்தொற்று நேரத்தில் வேலை கிடைப்பதே அரிதாக உள்ள சூழலில், சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும் எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதே இந்த வேலைக்கு விண்ணப்பித்த பலரின் சமாதானமாக இருக்கிறது.