கடந்த 2019 இறுதியில் சீனாவில் கரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகின் அனைத்து நாடுகளுக்கும் கரோனா பரவிய நிலையில், அதை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது என்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக கரோனாவின் பிடியில் உலக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாமல் இந்தியா தப்பினாலும், இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது.
கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக படிப்படியாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. கரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனைத்து மக்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. அந்த வகையில் அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேஷாப் மஹந்தா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.
திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகம், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களின் வாயிலில், ‘நாங்கள் அனைவரும் தடுப்புசி செலுத்திக்கொண்டோம்’ என்று சுய அறிவிப்பை ஊழியர்கள் வெளியிட வேண்டும். இதேபோல் தனியார் அலுவலகங்களும் தங்கள் சுய அறிவிப்புடன் கூடிய பேனரை நிறுவ வேண்டும். தடுப்பூசி போடவில்லை என்ற காரணத்தால் அலுவலகம் வராத நாட்களுக்கு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். சுய அறிவிப்பில் பொய்யான தகவல் தரும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.