![covid vaccine](http://image.nakkheeran.in/cdn/farfuture/PXU0h4lkx4FMneVEIpFtF_KQUwp8TnqxtpHgYalNdGA/1617171956/sites/default/files/inline-images/dfff_3.jpg)
இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள், பயன்பாட்டில் உள்ளன. இந்த இரு தடுப்பூசிகளையும் மக்களுக்கு செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இவற்றில் ‘கோவாக்சின்’ முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகாவும் முதலில் இணைந்து தயாரித்தன. பின்னர் அந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-5’ (sputnik-V) என்ற தடுப்பூசியை, ரஷ்ய நேரடி முதலீட்டின் பங்களிப்போடு டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசிக்கான அனுமதி இன்னும் சில வாரங்களில் கிடைத்துவிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் இரண்டு டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட 21வது நாளில், இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ளலாம் என்றும், இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதிலிருந்து 28 முதல் 42 நாட்களில் கரோனாவிற்கு எதிரான உச்சபட்ச எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘ஸ்புட்னிக்-5’ (sputnik-v) கரோனாவிற்கு எதிராக 91 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.