இந்தியா முழுவதும் சிறுமி ஆசிஃபா கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து பேசப்பட்டு வருகிறது. உலக அளவில் இருக்க கூடிய ஊடகங்களும் ஜம்மு - காஸ்மீரில் கூட்டணியில் இருக்க கூடிய பாஜக எம்.எல்.ஏக்கள் தேசிய கொடியுடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடி வருவதை தங்களின் செய்திகளில் குறிப்பிட்டு இருக்கிறன்றனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமிருந்து கண்டனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து வாய் திறக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளா மக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பு "10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகள் உள்ளே இருக்கிறார்கள் பாஜக-வை சேர்ந்தவர்கள் வாக்கு கேட்டு உள்ளே வர வேண்டாம்" என்று சிறிய அளவிலான பதாகைகளை வைத்ததோடு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கண்ணூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கே.ராமசந்திரன் நாயர் கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்கு கேட்டு பாஜக-வினர் வர வேண்டாம் என்பதற்காக பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.