பீகார் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இதனால், பா.ஜ.க கட்சியிலிருந்த அமைச்சர்கள் பலர் தங்களது அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் பீகார் அரசு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்து எம்.எல்.ஏக்களுக்கான குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் இருந்து வெளியேறாமல் பல மாதங்களாகத் தங்கி இருந்தனர். இதனையடுத்து, பீகார் அரசு இவர்களை அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி பலமுறை அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் எந்த பதிலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில், அரசு பங்களாவில் பல காலம் தங்கியிருந்த காரணத்திற்காக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு பீகார் அரசு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவிக்கு ரூ.1.26 லட்சம், முன்னாள் அமைச்சர்கள் அலோக் ரஞ்சனுக்கு ரூ.1.67 லட்சம், ராம் சூரத்குமாருக்கு ரூ.90,928, ஜிபேஸ் குமாருக்கு ரூ.1.26 லட்சம் மற்றும் ஜானக் ராமுக்கு ரூ.65,922 என பீகார் மாநில அரசு அபராதமாக விதித்துள்ளது.