நாடு முழுவதும் தசரா பண்டிகை சிலநாட்களுக்கு முன்னர் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது பூசாரி ஒருவர், பக்தர்களின் தலையில் தனது காலை வைத்து ஆசிர்வாதம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது தற்போது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கோர்தா மாவட்டம், பான்பூர் பகுதியில் வாகன நிறுவனம் ஒன்று சில தினங்களுக்கு முன் தசரா பண்டிகையைக் கொண்டாடியது. அப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை அங்கு பூஜை செய்த பூசாரி ஆசிர்வதித்தார். ஆனால் சாதாரணமாக அல்லாமல், ஊழியர்களை தரையில் அமரவைத்து, அவர்களின் தலை மீது கால்களை வைத்து ஆசிர்வதித்துள்ளார். இதை வீடியோ எடுத்த அங்கிருந்த நபர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பூசாரியின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூசாரி பாரம்பரியமாக செயல்பட்டுள்ளார் என சிலர் ஆதரித்தாலும், அதிக அளவிலான எதிர் விமர்சனங்களால் இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவில் பூசாரியிடம் கேட்கப்பட்ட போது, ''இதை தவறாக பேசுபவர்களுக்கு, இந்த வழிபாடு பற்றி தெரியாது. அவர்கள் இதனை திசைதிருப்ப விரும்புகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இவ்வாறு நடந்து வருகிறது.'' என்றார்.