
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி ஆந்திராவில் மொத்தம் உள்ள மக்களவைத் 25 தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
அதே சமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்ட 3 பேர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புங்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமத்திலிருந்து 3 பேரும் கடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மீட்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பலநாடு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. இரு கட்சியினரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவிட முயன்றதாக கூறி இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டனர். அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தாலுவாய் பள்ளி கிராம வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை, ஒருவர் தூக்கி போட்டு உடைத்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல்நாடு மாவட்டத்தில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கற்களை வீசியும், தடிகளைக் கொண்டும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் சித்தூர் தொகுதி குடிபாலா பகுதியில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர் சுரேஷுக்கு கத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.