இந்தியா முழுவதுமே வரதட்சணை வாங்கும் பழக்கம் இருந்துவந்தாலும், பெரிய அளவிலான உயிரிழப்புகள் அடிக்கடி நடப்பதில்லை. ஆனால், கல்வியறிவில் இந்தியாவிற்கே மூத்த மாநிலமாக இருக்கும் கேரளாவில் கடந்த சில வருடங்களில் வரதட்சணை கொடுமை காரணமாக 10க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளது. படிப்பறிவில் உச்சத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், உ.பி, பீகாரில் கூட நடக்காத நிலையில், வரதட்சணை காரணமாக கொலைவரை கேரளாவில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அம்மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது அம்மாநில பல்கலைக்கழகம் ஒன்று அதற்கான ஏற்பாட்டை செய்துவருகிறது.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம் தங்கள் பல்கலை.யில் இனி பட்டம் வாங்கும் அனைவரும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்ட நபர், எதிர்காலத்தில் திருமணம் முடிக்கும்போது வரதட்சணை வாங்கினார் என்ற புகார் வந்தால், அவரின் பட்டம் பறிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனை அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் இதே மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.