மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.
175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.
இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.