Skip to main content

டெலிகிராம் முதலீடு மோசடி; ஆசை வார்த்தையை நம்பி 38 லட்சத்தை பறிகொடுத்த பொறியாளர்

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

Telegram Investment Scam; The engineer who cheated 38 lakh rupees by trusting the word of wish

 

புதுச்சேரி பிருந்தாவனம் நகரை சேர்ந்தவர் சையது சலாம் (வயது 39). பொறியாளரான இவர் வெளிநாட்டில் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருக்கும் பொழுது இணையவழி மோசடிக்காரர்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு நாங்கள் சொல்கின்ற நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத லாபம் கொடுப்போம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி கடந்த மாதம் 17 ஆம் தேதி முதலில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில யூடியூப் லிங்க்குகளை அனுப்பி அவரை சப்ஸ்கிரைப் செய்ய சொல்கிறார்கள். அவர் சப்ஸ்கிரைப் செய்து முடித்தவுடன் 300 ரூபாய் சேர்த்து 1300 ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் செலுத்தினர். அன்றைய தினமே மீண்டும் 6 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறார். அவர்கள் சொன்ன டாஸ்க்கை முடித்தவுடன் 1800 ரூபாய் சேர்த்து 7800 ரூபாய் அவர் வங்கி கணக்கிற்கு வருகிறது. பிறகு நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும். பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்று சொன்னதை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் 38 லட்ச ரூபாயை  இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்திய பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் 52 லட்ச ரூபாய் பணம் இருப்பதாக காட்டியது.

 

MBBZ.CC என்ற இணையதளத்திலும் சையதுசலாமை அவர்கள் முதலீடு செய்ய சொல்லி இருக்கின்றனர். மேற்படி பணத்தை எடுக்க முயன்றபோது அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதை கண்டு அதிர்ந்த சையது காலம் தான்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் மோசடிக்காரர்களையும் சையதுசலாமினால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்புகொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகளும் க்ளோஸ் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனால் ஏமாற்றமடைந்த சையது சலாம் நேற்று புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

இதனைத் தொடர்ந்து  பொதுமக்களுக்கு இணைய வழி காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை  விடுத்துள்ளது. அதில் இணையவழியில் டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற ஆன்லைன்  இணையதளங்களில்  இருந்து வருகின்ற அதிக லாப முதலீட்டு அழைப்புகளை ஒருபொழுதும் நம்பாதீர்கள். அது முழுவதும் இணைய வழி மோசடிக்காரர்களின் கைவரிசையாகும். சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு முதலீடும் செய்யாதீர்கள். அவர்கள் சொல்கின்ற எந்த ஒரு ஆசை வார்த்தையும் நம்பாதீர்கள். நூற்றுக்கு நூறு சதவீதம் இணையவழி மோசடிக்காரர்கள் மட்டுமே உங்களை தொடர்பு கொள்கிறார்கள். ஆகவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற இணையவழி மோசடிக்காரர்களிடம் இழக்க வேண்டாம்' என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்