ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி அன்று தப்ரஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் இரு சக்கர வாகனத்தைத் திருட முற்பட்டார். அப்போது அந்த ஊர் மக்கள் சிலர் தப்ரஸ் அன்சாரியை கையும் களவுமாகப் பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும் அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ எனவும் ‘ஜெய் அனுமான்’ எனவும் கூறச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள். தப்ரஸ் அன்சாரியைக் கட்டி வைத்து அடித்த வீடியோ அன்று சமூக வலைத்தளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் தப்ரஸ் அன்சாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில், அடுத்த 5 நாளில் தப்ரஸ் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி அவையை முடக்கினர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தப்ரஸ் அன்சாரியை அடித்த 13 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு ஜார்க்கண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் நீதிபதி அமித் ஷேகர் தண்டனையின் விவரங்களை அறிவித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேர்களில் ஒருவர் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பலியாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து 2 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் தலா 15,000 ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டது.