உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மனிதர்களை மட்டும் அச்சுறுத்தி வந்த இந்த கரோனா தொற்று, தற்போது விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் கரோனா வைரஸ் பரவலுக்கு பயந்து இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு மாஸ்க் அணிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, " அமெரிக்காவில் புலிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட உடன் நான் பதறிவிட்டேன். என் பண்ணையில் இருபது ஆடுகள் உள்ளது. அவைகளை நான் குழந்தைகள் போல் பராமரித்து வருகிறேன். இதை நம்பிதான் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம். அதனால் கரோனா வராமல் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று டிவியில் பார்த்தேன். அதனால் நானே கடையில் மாஸ்க் வாங்கி ஆடுகளுக்கு கட்டியுள்ளேன்" என்றார்.