இந்தியா முழுவதும் பொருளாதார தேக்கநிலை நிலவி வரும் நிலையில், ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. மாருதி சுசூகி, அசோக் லேலண்ட் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் உற்பத்தியை குறைந்துள்ளன.
இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு மத்திய நிதியமைச்சர் கூறிய காரணத்தை இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "சொந்த வாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம். பெரும்பாலான இளைஞர்கள் மெட்ரோ அல்லது கால் டாக்ஸிகளில் பயணிப்பதால் யாரும் சொந்த வாகனம் வாங்குவதில்லை" என தெரிவித்தார்.
அவரின் இந்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார தேக்கநிலையை மூடி மறைப்பதற்காக நிதியமைச்சர் மக்கள் மீது குறை கூறுகிறார் என இளைஞர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.