இந்தியாவின் முதல் தனியார் பயணிகள் ரயில் சேவை கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த ரயில் தாமதமானதால் பயணிகளுக்கு 1.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயில் 550 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 6.15 மணிநேரத்தில் கடக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று முந்தினம் லக்னோவில் இருந்து காலை 6.10 க்கு புறப்பட வேண்டிய ரயில் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.55 மணிக்கும், மறுமார்க்கத்தில் மாலை 3.35 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 2 மணி நேரம் தாமதமாக 5.30 மணிக்கும் புறப்பட்டது.
இந்த தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், இந்த இரண்டு ரயில்களிலும் பயணித்த பயணிகளுக்கு 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. அதன்படி லக்னோவில் இருந்து டெல்லி சென்ற 450 பயணிகளுக்கு தலா 250 ரூபாயும், டெல்லியில் இருந்து லக்னோ சென்ற 500 பயணிகளுக்கு தலா 100 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரயில் தாமதமாக சென்றதற்கு பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இந்திய ரயில்வே வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.