நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று நடைபெற்ற தேர்தலில், ஆந்திராவில் மொத்தம் உள்ள மக்களவைத் 25 தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் இரு கட்சியினரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வந்ததால் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, தெனாலி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வரிசையில் நின்று வாக்களிக்க சொன்ன வாக்காளரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவகுமார் கன்னத்தில் அறைந்தார். அதன் பின்னர் வாக்காளரும் பதிலுக்கு எம்.எல்.ஏ. சிவகுமார் மீது அறை விட்டார். இதனையடுத்து எம்.எல்.ஏ. சிவகுமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கினர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் இரு இளைஞர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை கண்டு சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள், அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை நடுரோட்டில் மண்டியிட வைத்து கைகளை மேலே உயர்த்த சொல்லி தடியால் அடித்து விசாரித்தனர். அதில், தாங்கள் கள்ள ஓட்டு போட வந்ததை அந்த இளைஞர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, அவர்களை சி.ஆர்.பி.எப் வீரர்கள் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.