உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி நாடு முழுவதும் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ராமர் கோவிலுக்கு 1 லட்சம் லட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராமர் கோயிலில் வைக்கப்பட உள்ள சீதா தேவி சிலைக்கு சென்னையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வாழை நார் புடவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி பல மாநிலங்களில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், நாட்டின் பல மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், ஜெய் ஸ்ரீராம் பாடல் பாடி நடனமாடியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள், ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ என்று ஆசிரியருடன் ஆடிப் பாடியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.