கேரளாவின் கொல்லம் மாவட்டம், தென்மலை அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் கழுதுருட்டி ஆற்றங்கரையில் கடந்த 2 ஆம் தேதியன்று தமிழக வாலிபர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்த தென்மலை டி.ஒய்.எஸ்.பி. வினோத் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறையினரின் விசாரணையில் இந்த கொலைச்சம்பவம் திருமணத்தை மீறிய விவகாரம் என்பது தெரிய வந்திருக்கிறது. இதில் கொலையானவர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட அன்பழகன் (39) என்பதும், பின்பு அவர் செங்கோட்டையை அடுத்த காலாங்கரையில் வசித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. மேலும், அன்பழகனின் மனைவி அதே பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவருடன் தொடர்பு கொண்டு பழகி வந்ததில் தம்பதியர் இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறதாம்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சொன்ன பைசல், அன்பழகனை நைசாக காரில் கேரளாவுக்கு அழைத்து சென்று அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து அன்பழகனுக்கு மது விருந்து அளித்திருக்கிறார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அன்பழகனின் கழுத்தை அறுத்துக் கொன்று கழுதுரூட்டி ஆற்றங்கரையில் வீசியுள்ளனர்.
இது குறித்து நடவடிக்கையை மேற்கொண்ட தென்மலை போலீசார் இதில் 6 பேருக்குத் தொடர்பு உள்ளதை அறிந்து முதற்கட்டமாக கரூர் ரெட்டியார் பேட்டையைச் சேர்ந்த குமார் (29) மற்றும் அருப்புக்கோட்டையின் அத்திப்பட்டி செம்பட்டி பகுதியின் அடைக்கலம் (30) உள்ளிட்ட இருவரைக் கைது செய்து தலைமறைவான பைசல் உள்ளிட்ட நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.
தமிழக வாலிபரை கேரளா கொண்டு சென்று கழுத்தறுத்துக் கொன்று வீசிய சம்பவம் தென்மலை பகுதியை உறைய வைத்திருக்கிறது.