நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களின் மொத்தம் எண்ணிக்கை ஒன்பது ஆகும். அதில் தமிழகம்-1, பீகார்-2, குஜராத் -2, ஒடிஷா-4, உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளன. தமிழகத்தில் அடுத்த மாதம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தை தவிர்த்து மீதமுள்ள எட்டு இடங்களுக்கான தேர்தல் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், தமிழருமான ஜெய்சங்கர் இன்று மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு வாய்ப்பளிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் தமிழக பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் நான்கு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 23 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ஒடிஷா மாநிலத்தில் இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி பாஜகவிற்கு கிடைக்கும். இந்த மாநிலத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தமிழக பாஜக தலைவர்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல் பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களில் ஒரு இடத்தை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி வட மாநிலங்களில் அபார வெற்றியும், தென் மாநிலங்களில் தோல்வியையும் தழுவியது. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைவர்கள் பலரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு ராஜ்ய சபா பதவி வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.