
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 600 இந்திய (தமிழக) மீனவர்களை சுட்டும், அடித்தும் கொன்றிருக்கிறது இலங்கை கடற்படை. இப்போது 4 மீனவர்கள் சென்ற படகு இடித்து மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 18ஆம் தேதி கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 214 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் 213 படகுகள் கரை திரும்பியது. ஒரு படகு மட்டும் காணவில்லை. அப்போதுதான் சக மீனவர்கள் கூறுகின்றனர், இலங்கை கடற்படையினர் அவர்கள் கப்பலை நம் மீனவர்களின் படகில் இடித்து மூழ்கடித்துவிட்டார்கள் என்று. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். நம் மீனவர்களைக் காப்பாற்றிவிடக்கூடாது என்பதற்காக படகு மூழ்கிய பகுதியிலேயே இலங்கை கடற்படையினர் சுற்றி வந்தனர். அதனால் யாராலும் 4 மீனவர்களையும் காப்பாற்ற முடியவில்லை என்கிறார்கள் சக மீனவர்கள்.

தற்போது, இலங்கை கடற்பகுதியில் முதலில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; காணாமல் போன மீனவர்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டமும் செய்தனர்.

இதில் சிங்கள அரசிடம் இருந்து தப்பி வந்து மண்டபம் முகாமில் தஞ்சடைந்திருந்த இளைஞரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றபோது, சிங்கள கடற்படை மூழ்கடித்துக் கொன்றுவிட்டது. மீனவர்களின் வேதனைக் குரல்கள் மத்திய அரசுக்கு இனிமேலாவது கேட்குமா?