பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம், 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய மனிதவள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பாஜக எம்.பி தலைமையிலான பெண்கள் அதிகாரமளித்தளுக்கான நாடாளுமன்ற குழு, இந்த திட்டம் தொடர்பான அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 446.72 கோடியில் 78.91 சதவீத நிதி ஊடக விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 2014-15 முதல் 2019-2020 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் இந்த திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 848 கோடி ரூபாயில் 25.13% நிதி மட்டுமே அதாவது 156.46 கோடி மட்டுமே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற செய்தியை மக்களிடையே பரப்ப ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை குழு புரிந்து கொண்டாலும், திட்டத்தின் நோக்கங்களை சமநிலைப்படுத்துவதும் முக்கியமானது என கருதுகிறது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான திட்டமிடப்பட்ட செலவீன ஒதுக்கீட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.