Skip to main content

தாஜ்மகால் யாருக்குச் சொந்தமானது? - முகலாய மன்னரின் வாரிசு விளக்கம்

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

தாஜ்மகால் தங்களுக்குச் சொந்தமானது என உ.பி. வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அது குறித்து முகலாய மன்னர் பகதூர் ஷா ஜஃபரின் கொள்ளுப்பேரனான யாகூப் ஹபீபுதீன் டுசி விளக்கம் அளித்துள்ளார்.

 

Tajmahal

 

முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மகாலைக் கட்டியெழுப்பினார். அது தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது. இந்நிலையில், ஆக்ராவில் மன்னர் ஷாஜகானின் 363ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இதில், முகலாய வாரிசு யாகூப் ஹபீபுதீன் டுசி கலந்துகொண்டார். 

 

அப்போது செய்தியாளர்கள் தாஜ்மகாலை உரிமை கோரும் வக்புவாரியம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய அவர், ‘வக்பு வாரியத்திற்குத்தான் தாஜ்மகால் சொந்தமானது என ஷாஜகான் எந்த இடத்திலும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சன்னி வக்பு வாரியத்தினர் நில ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலிகளைக் கூட ஒழுங்காக பராமரிக்கத் தெரியாதவர்கள். அவர்களால் எப்படி தாஜ்மகாலை நிர்வகிக்க முடியும்? முகலாயர்களின் நேரடி வாரிசாக நான் இருக்கிறேன். எனவே, சன்னி வக்புவாரியத்தின் முத்தவல்லியாக என்னை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது, தாஜ்மகாலை இந்தியாவிற்கு சொந்தமானதாக அர்ப்பணிப்பேன். தாஜ்மகால் இந்தியாவின் சொத்துதானே தவிர, அதை உரிமை கொண்டாட, வக்பு வாரியமோ அல்லது வேறு எவருமோ உரிமை கொண்டாட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்