புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியது. இருப்பினும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்துள்ள நிலையில், வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 18 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, ராஜ்பவன்- பர்வத வர்தினி, இந்திரா நகர்- சக்திவேல், நட்டப்பாக்கம்- ஞானஒளி, முதலியார் பேட்டை- ஹரிகிருஷ்ணன், நெல்லித்தோப்பு- முருகேசன், காமராஜ் நகர்- எஸ்.லெனின், லாஸ்பேட்டை- சத்யமூர்த்தி, காலாபேட்டை- சந்திரமோகன், அரியாங்குப்பம்- ருத்ரகுமார், தட்டாஞ்சாவடி- ராஜேந்திரன், வில்லியனூர்- பானுமதி, ஒழுக்கரை- பழனிவேல், திருபுவனை- ரமேஷ், ஓபுலம்- சந்தோஷ்குமார், உருளயன்பேட்டை- சக்திவேல், எம்பளம்- சோம்நாத், நெடுங்காடு- நரசிம்மன், கதிர்காமம்- சதானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் முதற்கட்டமாக 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முதல் கட்சி மக்கள் நீதி மய்யம் என்பது குறிப்பிடத்தக்கது.