கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது தீர்ப்பளித்துள்ளனர். அதன்படி சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அறிவித்துள்ளனர். எனவே கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.