மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷேக் ஷாஜகான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்துப் பெண்கள், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்தும், அதற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஷேக் ஷாஜகானின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்ததது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. பெண்களின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், ‘ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவு நபர்களை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ஷேக் ஷாஜகான் விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், தன்னுடைய பாலியல் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் அவர், உள்ளூர் பா.ஜ.க கட்சியினர் வெற்று காகிதத்தில் கையெழுத்திட தன்னை வற்புறுத்தியதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், ‘உள்ளூர் பாஜக மகளிர் மோர்ச்சா செயல்பாட்டாளரும் பிற உறுப்பினர்களும், பிரதம மந்திரியின் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு எனது பெயரை சேர்ப்பதாகக் கூறி என்னுடைய கையெழுத்தைக் கேட்டனர். பின்னர், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வலுக்கட்டாயமாக என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், திரிணாமுல் அலுவலகத்திற்குள் என் மீது எந்த பாலியல் தாக்குதலும் நடக்கவில்லை. அத்தோடு, கட்சி அலுவலகத்துக்கு இரவில் தாமதமாக செல்ல நான் ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சந்தேஷ்காலி சம்பவத்தில் பெண் ஒருவர் பா.ஜ.க மீது குற்றம் சாட்டியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.