இனி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறு மொழிகளில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலக நாடுகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது அந்நாட்டின் தேசிய மொழியிலேயே வெளியிடப்படும். இதனை மாற்றி முதன்முறையாக இந்திய நீதிமன்றத்தில் 6 மொழிகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தற்போது வரை ஆங்கிலத்தில் தான் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற்போது, வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமி, ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை.
இது குறித்து விளக்கமளித்துள்ள உச்சநீதிமன்றம், அதிகமான மேல்முறையீடு வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தற்போது தேர்ந்தெடுத்துள்ளோம். மற்ற மொழிகளையும் சேர்க்க விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.