கல்லூரி மாற்று பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உயர் கல்வித்துறைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பாடுகள் முடங்கிய நிலையில், பள்ளி பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மற்றும் பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், உயர்கல்வித்துறைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பல்கலைக் கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைப் (SOP) படி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.