கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள பள்ளி ஒன்றில், சில மாணவர்கள் ஆசிரியரைக் குப்பைக் கூடையால் தாக்க முயன்றுள்ளனர். பின்னர் அந்த ஆசிரியரின் தலையிலேயே குப்பை கூடையை கவிழ்த்துள்ளனர். டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள கர்நாடகாவின் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர், இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறையும், காவல்துறையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள மாணவர்களின் அவமதிப்பிற்குள்ளான ஆசிரியர், வகுப்பறைக்குள் நுழையும்போது தரையில் குட்கா பாக்கெட்டுகள் சிதறி கிடந்ததாகவும், எனவே தான் மாணவர்களை ஒழுக்கத்தைப் பேணுமாறு அறிவுத்தியதாகவும் அதனால் வகுப்பு எடுக்க தொடங்கியதும் சில மாணவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் மீது புகாரளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.