புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (27-06-2020) செய்தியாளர்களுக்கு காணொளி மூலம் பேட்டியளித்தார்.
அதில், "கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தால், தற்போது 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தால் அவரது உறவினர்கள் அல்லது அருகில் உள்ளவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.
ஆனால் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நெல்லித்தோப்பு பகுதியில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அங்கு சரியாக சோதனை செயப்படுகின்றதா? அவர்களுக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டு அறிந்தேன். முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், முதலமைச்சர் அலுவலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? கரோனா நோய் தொற்றுவை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளித்து, முகக்கவசம் அணிந்து வருகின்றனரா? என ஆய்வு செய்தோம். கிராம பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் 3 சுற்றாக வேலை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்கப் பெறும்.
ஒரு குழு அமைத்து மருத்துவ உபகரணங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் புதிதாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் தேவையில்லாமல் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தான். அமைச்சரவை மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பலருக்கு கிடைக்கவில்லை. சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி புதுச்சேரி அரசின் உத்தரவுகளுக்கு தலைமை செயலர் கட்டுப்பட வேண்டும். தேவைப்பட்டால், முரண்பட்டால் மட்டுமே மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்ப வேண்டும்.
கோப்புகளை திருத்தி உத்தரவு பிறப்பிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரிகள் துணைநிலை ஆளுநருக்கு துணை போனால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் அரசுக்கு களங்கம் விளைவித்து வருகின்றார். இதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு விரோதமாக அவர் செயல்பட்டு வருகின்றார். இது ஏற்றுக் கொள்ள முடியாது.
புதுச்சேரி மாநில பட்ஜெட் குறித்தான ஒப்புதலுக்கு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். ஆனால் ஒரு சிலர் மக்களுக்கு மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளின் இறப்பிற்கு தமிழக முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து கரோனா நோய் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். விதிகளை பொதுமக்கள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். ஜூலை 2- ஆம் தேதிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். ஜூன் 30- ஆம் தேதி மத்திய அரசு விதிமுறைகளை தெரிவிக்கும். அதற்கு பின்பு தமிழகத்தைப் பின்பற்றி ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என அறிவிப்போம்" என்றார்.