
மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியைக் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர். அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தொடர்ந்து 3 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி மீண்டும் விவசாய அமைப்புகளுடன் சண்டிகரில் மத்திய அரசு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இருப்பினும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சலோ என்ற பேரணி தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, நேற்று (20-02-24) மீண்டும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டெல்லி போலீசார் ஏற்படுத்திய இரும்பு தடுப்புகளை, உடைக்க ஜேசிபி வாகனங்களை கொண்டு விவசாயிகள் முயற்சி செய்தனர். அவர்களை தடுப்பதற்கு, காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசினர். ஆனால், அதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள் முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.