ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.
அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.