கர்நாடகா மாநிலம், கடலோர மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் மக்களிடம், இறந்து போனவர்களின் ஆத்மாக்களை சாந்திபடுத்தும் வகையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ‘குலே மடிமே’ என்ற வினோத வழக்கம் இருக்கிறது. இந்த வினோத வழக்கம் அண்மையில் உள்ளூர் நாளிதழிலில் விளம்பரம் மூலம் வெளியிடப்பட்டு பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடாவில் உள்ள புத்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தனது பெண் குழந்தைக்கு வரண் தேடி உள்ளூர் நாளிதழில் விளம்பரம் கொடுத்தனர். அந்த விளம்பரத்தில், ‘குலால் ஜாதி மற்றும் பங்கேரா (கோத்ரா) ஒரு பெண்ணுக்கு, ஆண் குழந்தை தேவை. குழந்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அதே சாதியைச் சேர்ந்த வேறு பாரியைச் சேர்ந்த பையன் இருந்தால், குடும்பம் பிரேதா மதுவே செய்யத் தயாராக இருந்தால், அவர்கள் தொடர்பு கொள்ளலாம், என்று ஒரு தொலைபேசி எண்ணுடன்’ இணைத்து விளம்பரம் கொடுக்கப்பட்டது.
திருமணம் ஆகாமல் இறந்து போனவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தச் சம்பிரதாயம் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து விளம்பரம் கொடுத்த குடும்பத்தினர் கூறுகையில், ‘விளம்பரத்தை வைக்கும்போது, நாங்கள் கேலி, கிண்டல்கள் செய்யப்படுவோம் என்று நாங்கள் கவலைப்பட்டோம், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இறந்து போன தனது மகளுடனான திருமணத்திற்கு 50 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.