ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி வகை சிறிய ராக்கெட் இரண்டு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களும் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி வகை சிறிய ராக்கெட் ஏவப்பட்டது. இதில், EOS 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், ஆசாதி-சாட் என்ற செயற்கைக்கோளும் அனுப்பட்டன. ஆசாதி-சாட் செயற்கைக்கோளானது நாடு முழுவதும் 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியதாகும்.
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த இரு செயற்கைக்கோள்களில் இருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து, செயற்கைக்கோள்களின் நிலையை அறிய இஸ்ரோ முயற்சி எடுத்துவந்த நிலையில், செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்குப் பதிலாக நீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இரு செயற்கைக்கோள்களையும் மேற்கொண்டு பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இஸ்ரோ தலைவர் விரைவில் அறிக்கையாக வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.