கடந்த 2019 ஆண்டு வெளியான அயோத்தியா நிலவழக்கின் இறுதித் தீர்ப்பதில் உச்சநீதிமன்றம், அயோத்தியில் இராமர் கோயில் கட்டலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அயோத்தி இராமர் கோயிலுக்கு இந்தியப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இலங்கையில், 'சீதா எலியா' என்ற ஒரு இடமுள்ளது. இங்குதான் சீதை சிறை வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சீதா எலியாவில் சீதைக்கென்று ஒரு கோயிலுமுள்ளது. இந்தநிலையில் இராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக, சீதா எலியாவிலிருந்து கல் ஒன்று கொண்டுவரப்படுகிறது. இந்த கல் இராமர் கோயிலின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ள இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், "சீதா எலியாவில் இருந்து இராமர் கோயிலுக்குக் கொண்டுவரப்படும் கல், இந்திய- இலங்கை உறவின் வலுவான தூணாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளது.