உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் உத்தரப்பிரதேசத் தேர்தலில், மம்தா பானர்ஜி தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் மம்தாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் கிரண்மய் நந்தா, உத்தரப்பிரதேசத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடாமல் சமாஜ்வாடி கட்சியை ஆதரிக்கப்போவதாகவும், பிப்ரவரி 8ஆம் தேதி லக்னோவுக்கு வருகை தரும் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவோடு சேர்ந்து மெய்நிகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் மம்தா பானர்ஜி, வாரணாசியிலும் மெய்நிகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கிரண்மய் நந்தா கூறியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி போட்டியிடுவதைத் தவிர்த்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.