நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 18ம் தேதி முதல் கூட்டப்பட உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்பு ஐந்து நாள் கூட்டத் தொடர் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், "இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிரல் குறித்தும் எங்களுக்கு எந்தவித யோசனையும் இல்லை. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம், ஐந்து நாட்களும் அரசாங்க அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே. இருந்தும் நிச்சியம் நாங்கள் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்க விரும்புவோம். ஏனென்றால், இந்த அமர்வில் பொது நலம் சார்ந்தும் அதன் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப எங்களுக்கு இது வாய்ப்பளிக்கும். மேலும், கீழ் சொல்லப்பட்டுள்ள இப்பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் விவாதத்திற்கும் அமர்வின் நேரம் உரிய விதிகளின் கீழ் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.
மேலும், அந்த கடிதத்தில் ஒன்பது விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு;
1.தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது
2. இந்திய அரசு விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு உறுதியளித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மற்றும் அவர்கள் எழுப்பிய பிற கோரிக்கைகள்.
3. நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து அதானி நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிச்சத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்.
4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வேதனைகளும், மாநிலத்தின் அரசியலமைப்பு இயந்திரம் பற்றியும் சமூக நல்லிணக்கத்தின் குறித்து விவாதிக்க வேண்டும்.
5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்திருப்பது.
6. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள எல்லைகளில் நமது இந்தியப் பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பது மற்றும் நமது இறையாண்மைக்கு சவால் விடுவது.
7.ஜாதி வாரியான கணக்கெடுப்பு.
8. மத்திய-மாநில அரசு உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.
9. இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தால் சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி ஏற்படுவது. உள்ளிட்டவை சிறப்பு அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தொடர்ந்து கடிதம் குறித்து, காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ், “வழக்கமாக சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும் போது, இரு தரப்பு ஒப்புதலுடனும் பல அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து நடைபெறும். சிறப்பு கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலுக்கான விவரங்கள் எங்களிடம் இல்லாதது இதுவே முதல்முறையாக” என பேசியுள்ளார்.