கடந்த வருடம் இதேநாளில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலகல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதேநேரம் இந்தியப் பகுதி சீனாவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியா - சீனா செய்துகொண்ட ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பாதகமானதாக அமைந்துள்ளது போல் தெரிவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “2020 ஜூன் 14 - 15ஆம் தேதி இரவு சீனாவின் பி.எல்.ஏ வீரர்களுடனான மோதலில், பீகார் ரெஜிமென்ட்டின் 20 துணிச்சலான வீரர்களை இழந்தோம். அந்தத் துயரமான இழப்பின் முதலாமாண்டை நாம் அணுகும்போது, அவர்களின் உயர் தியாகத்தை நினைவுகூறுவதில் நன்றியுள்ள இந்த நாட்டோடு காங்கிரஸ் இணைகிறது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "சீனாவுடன் நடந்த மோதலின் விவரங்கள் பிரதமரின் அறிக்கையாக வெளியிடப்பட வேண்டுமென்று நாங்கள் தொடந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 2020க்கு முன்னர் இருந்த நிலைமையை மீட்டெடுப்பதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் தொடர்ந்து கேட்டுவருகிறோம். சீனாவுடனான படைவிலகல் ஒப்பந்தம் முற்றிலும் இந்தியாவிற்குப் பாதகமாக வேலை செய்துள்ளதாக தெரிகிறது" என கூறியுள்ளார்.