ஐபேக் அமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் அம்மாநில ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அமைப்புடன் கைகோர்த்துள்ளது. இந்த அமைப்பு அக்கட்சிக்குத் தேவையான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், இவ்வமைப்பின் செயல்பாடுகள் மீது தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான சுவேந்து அதிகாரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐபேக் நிறுவனம் எடுத்த அரசியல் ரீதியிலான சில முடிவுகள், அரசியலில் மம்தாவின் மைத்துனரின் தலையீடு உள்ளிட்ட விஷயங்களால் சுவேந்து அதிகாரி அதிருப்தியிலிருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை மம்தா பானர்ஜிக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, அமைச்சரவையிலிருந்தும் ஹால்டியா மேம்பாட்டு ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் மட்டுமே தொடர்ந்து வகிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தனது உத்தியோகபூர்வ குடியிருப்பு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பையும் கைவிட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் செல்வாக்கு மிக்கவருமான சுவேந்து அதிகாரி விரைவில் கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அவர் அவ்வாறு கட்சியிலிருந்து விலகினால், அது சட்டமன்ற தேர்தலில் மம்தாவிற்கு மிகப்பெரிய சறுக்கலாக அமையும் எனக் கருதப்படுகிறது.